முதன்முறையாக மலையாளப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு படங்கள் தேர்வாகியுள்ளன. அதில் மலையாள டைரக்டர் பிஜூகுமார் தாமோதரன் இயக்கத்தில் ஆகாசத்தின் நிறம் (கலர் ஆப் ஸ்கை) படமும் தேர்வாகி இருக்கிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையோன தொடர்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் இன்தரஜித், அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ப்ருத்விராஜ் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃபால்புரூக் தியேட்டரில் கடந்த நவம்பர் 2 முதல் 8-ம் தேதிவரை திரையிடப்பட்டது. இதில் சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கும் இப்படம் தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து இப்படத்தின் டைரக்டர் பிஜூ குமார் கூறுகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த படங்களுக்காக தேர்வாகியுள்ள 282 படங்களில் எனது ஆகாசத்தின் நிறம் (கலர் ஆப் ஸ்கை) படமும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே 8வது யூரோசியா சர்வதேச திரைப்பட விழா, 48வது சிகாகோ திரைப்பட விழா, தெற்காசிய திரைப்பட விழா, கோவா சர்வதேச திரைப்பட விழா, கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா என பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் தேர்வாகியுள்ளது. மேலும் 15வது ஷாங்காய் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் தேர்வாகியுள்ளது.
மலையாளபடம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை மிகப்பெரிய கவுரவமாக அப்படத்தின் டைரக்டர் பிஜூகுமார் கருதுகிறார்.