சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த பாடம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் சொல்லித் தரப்படுகிறது. டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற பாடப் பிரிவில் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் என்ற தலைப்பில் இந்த பாடம் வருகிறது.
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பையும் ஏற்படுத்துவதற்காக ரஜினி பாடத்தை வைத்துள்ளனர்.
கடுமையாக உழைத்தால் லட்சியத்தை அடையலாம் என்பதற்கு உதாரணமாக ரஜினியை முன்நிறுத்தியுள்ளனர். பெங்களூர் - திருப்பத்தூர் மார்க்கத்தில் ஒரு கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ரஜினி. தனது 26 வயதில் சென்னை வந்து பட வாய்ப்புகள் தேடினார். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார். ரஜினி பட்ட கஷ்டங்கள், போராட்டம், சினிமா பிரவேசம், வாங்கி குவித்த விருதுகள், நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்து விஷயங்களும் பாட புத்தகத்தில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன. 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தப் பாடம் வைக்கப்பட்டுள்ளது.