மலையாளத்தில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. பெயரிலேயே பரபரப்பைத் தாங்கியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட படங்களை நிச்சயம் மலையாளத்தில் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். கேரளாவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் போற்றப்படும் ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இஎம்எஸ் நம்பூதிரிபாடு.
அவரது பெயரை வைத்து இப்படத்தைத் தயாரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்யாமின் என்பவர் எழுதிய சிறுகதைதான் இஎம்எஸ்ஸும் பெண்குட்டியும். இந்தக் கதையைத்தான் தற்போது அதே பெயரில் படமாக்கியுள்ளனர்.
இளையராஜாவின் இசைதான் இப்படத்தின் முக்கிய நாயகர்களில் ஒன்று. திரைக்கதை, வசனத்தை முகம்மது சபீர் கவனிக்க, ஜெயனன் வின்சென்ட் கேமராவைக் கையாண்டுள்ளார்.
உலகெங்கும் பிரபலமாக இருந்து வரும் இடப் பெயர்ச்சி அதாவது மைக்ரேஷன்தான் படத்தின் கதையாகும். ஆதி காலத்திலிருந்தே இந்த இடப் பெயர்ச்சி நடந்து வருகிறது. இதைப் பற்றித்தான் இந்தப் படத்தின் கதையும் பேசுகிறது.
இந்தியாவிலேயே வாழ்வாதாரத்திற்காக அதிக அளவில் இடம் பெயர்ந்து செல்வது கேரள மக்கள்தான். அதைப் பற்றிப் பேசுகிறது இப்படம்.
நம்ம ஊர் சரவணனும் படத்தில் நடித்துள்ளார். அவர் போக மேலும் சில பிரபலங்களும் படத்தில் உள்ளனராம்.
படத்தின் கதை இடப் பெயர்ச்சியாக இருக்கும் நிலையில் முக்கிய அரசியல் தலைவரான இஎம்எஸ்ஸின் பெயரை ஏன் படத்திற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. நம்ம ஊரில் இப்படி முக்கியத் தலைவர்களின் பெயர்களில் படம் எடுத்தால் என்னாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... படம் வரட்டும் பார்க்கலாம்...