பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை
உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
ஒருவேளை உணவுகளால் சரிசெய்யாமுடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும். சரி இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் : ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.
தண்ணீர் : தினமும் போதுமான அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கும்.
கற்றாழை : நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.
கடல் உணவுகள் : கடல் உணவுகளில் டாரின் (taurine) அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், டாரின் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இது கண்களுக்கும் சிறந்தது.
ஆப்பிள் சீடர் வினிகர் : இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
பால் : பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.
அதிமதுரம் (Licorice) : இந்த உணவுப் பொருள் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதைத் தடுக்கும்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு : இந்த இரண்டு பழங்களிலும் அதிகமான அளவில் அசிடிக் ஆசிட் மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை அந்த அமிலங்களின் வீரியத்தை குறைத்து, எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தையும் குறைக்கும்.
காரம் மற்றும் எண்ணெய் இல்லாத உணவுகள் : டயட்டில் காரம் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனாலும் எரிச்சலைத் தடுக்கலாம். ஏனெனில் காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருட்கள் கூட எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும்.