சிறுவயதிலேயே திருமணம் முடித்து, ஐந்து பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆனவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி தம்பதி. பிள்ளைகள் வெளிநாட்டில் குடியேறுகிறார்கள். பெற்றோர்களை தங்களுடன் அழைக்கின்றனர். வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பாத அவர்களுக்கு ஒதுக்குப்புறமான பண்ணையும்,
வீடுமே கோயிலாகிறது. அவர்களின் வாழ்க்கையை, இனிய சங்கீதமாக வார்த்துக் கொடுத்திருக்கிறது, ‘மிதுனம்’.
தெலுங்கு பத்திரிகையில் 20 வருடங்களுக்கு முன் ஸ்ரீரமணா எழுதிய கதையை, உணர்வுப்பூர்வமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஆர்ட் பிலிம் சாயல் இருந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் மிளிரும் நகைச்சுவையும், யதார்த்தமும் படத்தை கமர்சியலாக்குகிறது. படம் முழுக்க எஸ்.பி.பி., லட்சுமி இருவர் மட்டுமே நடித்திருப்பது புதுமை. சாவித்திரி என்ற பசு மாடும், அது ஈன்ற கன்று அஞ்சியும் கூட மறக்க முடியாத கேரக்டர்கள். 70 வயது நிரம்பிய தாசு கேரக்டரில் எஸ்.பி.பி அப்படியே பொருந்துகிறார். ‘சிகரம்’, ‘கேளடி கண்மணி’, ‘பாட்டு பாட வா’ படங்களையும் தாண்டி நிற்கிறது அவரது நடிப்பு. அவருக்கு ஈடுகொடுத்து, புஜ்ஜி லட்சுமியாக வாழ்ந்திருக்கிறார் லட்சுமி. இருவரது நடிப்புக்கும் விருது நிச்சயம்.
உணவுப்பிரியர் எஸ்.பி.பி., லட்சுமி சமைக்கும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கும் காட்சி, நாக்கில் நீர் ஊறும். தோட்டத்தை கவனித்துக்கொண்டு, லட்சுமிக்காக தானே செருப்பு தைத்துக் கொடுப்பது, கிணற்றில் மண்டிக்கிடக்கும் பழைய பொருட்களை கொண்டு கொலுசு செய்வது என சின்ன ஷாட்களும் நெஞ்சில் நிற்கிறது. இதே போலவே லட்சுமியும். தன் தோழியின் மகள் படிக்க உதவி செய்வதை மறைத்து விட்டாரே என்று அறிந்து துடிப்பதும், எஸ்.பி.பியின் மனிதநேயத்தை புரிந்துகொள்ளும் காட்சியும், நெகிழ்ச்சி.
கிராமத்திலுள்ள அந்த வீட்டிலேயே வாழ்ந்த உணர்வை ஒளிப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தணிகலயும், கலை இயக்குனர் நாகேந்திர பாபுவும் ஏற்படுத்தியுள்ளனர்.
வீணாபாணியின் மென்மையான இசையும், எஸ்.பி.உத்தவ்வின் எடிட்டிங்கும் இரண்டு மணி நேரப் படத்தை சோர்வடையாமல் கொண்டு செல்ல உதவியிருக்கின்றன. படம் முழுக்க இருவர் மட்டுமே நடித்தாலும், மகன்களின் குரலை பின்னணியில் ஒலிக்கச் செய்து, மறைத்து வைத்த செல்போன் மூலம் அவர்களிடம் லட்சுமி பேசும் காட்சி உணர்ச்சிகரமாக இருக்கிறது. வில்லனாக அறியப்பட்ட தணிகலபரணி இயக்கியுள்ளார். இப்படியொரு கதையைத் தேர்வு செய்து, இருவரை மட்டும் நடிக்க வைத்த அவரது துணிச்சலுக்கும், தைரியமாகப் படம் எடுத்த தயாரிப்பாளரையும் பாராட்டலாம்.