விஸ்வரூபம் படத்தின் இந்திப் பதிப்பை வெளியிட்டுவிட்டு இன்று சென்னை திரும்பினார் நடிகர் கமல். வட இந்தியாவில் தனது படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வடக்கில் மட்டும் 1000 அரங்குகளுக்கு மேல் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார் (ஆனால் 700 அரங்குகள் என பாக்ஸ் ஆபீஸ்காரர்கள் தெரிவித்துள்ளனர்). முதல்நாளான நேற்று சராசரியாக 50 முதல் 60 சதவீத
பார்வையாளர்களே இந்தப் படத்துக்கு திரண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இன்று சென்னை திரும்பிய கமல், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறினார்.
விஸ்வரூபம் படம் இந்தியாவில் தமிழகம் - புதுவையில் மட்டும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தடை செய்து வைத்துள்ளது.
இந்த தடைக்கெதிரான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்துக் கொள்ளும் விதமாக, அரசு அதிகாரிகள் - கமல் - இஸ்லாமிய அமைப்புகள் அமர்ந்து பேசி, ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கினால் படத்தை வெளியிட தடையை விலக்கிக் கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
நேற்று இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் எந்தக் காட்சியையும் என் அனுமதியின்றி, அல்லது கவனத்துக்குக் கொண்டுவராமல் வெட்ட அனுமதிக்க மாட்டேன் என்றார் கமல்.
எனவே அவர் இல்லாமல் பேச்சு நடத்துவது வீண் வேலை என்பதால், கமல் வரட்டும் என்று கூறி நேற்று கலைந்தனர்.
இன்று கமல் வந்திருக்கிறார். இஸ்லாமிய அமைப்புகள் குறிப்பிடும் காட்சிகள் முழுவதையும் வெட்ட அவர் சம்மதிப்பாரா... பிரச்சினையை முடித்துக் கொள்வாரா.. அல்லது மேலும் பரபரப்பாக்குவாரா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்!