பிரபுதேவாவும், அவர் நண்பர் கேகேவும் மும்பையில் நடனப் பள்ளியை நடத்துகிறார்கள். பள்ளி பிரபலமாக வேண்டும் என்பதற்காக தவறான வழிகளை கையாள்கிறார் கே கே. இது பிரபுதேவாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை பள்ளியை விட்டு வெளியே அனுப்புகிறார். நண்பனை நம்பி எல்லாவற்றையும் இழந்த பிரபுதேவா, தன் மாஜி நண்பன் கணேஷ் ஆச்சார்யாவை தேடிச் செல்கிறார். அங்கிருந்து சென்னை திரும்புவது அவர் திட்டம்.
ஆனால், கணேஷ் ஆச்சார்யா வாழும் பகுதியில் சில இளைஞர்கள் நடனத்தில் ஆர்வமாகவும், திறமையாகவும் இருக்கிறார்கள். கணேஷ் ஆச்சார்யாவிடம் நடனம் கற்று உள்ளுர் கோவில் திருவிழாக்களில் ஆடுகிறார்கள். அவர்களைக் கொண்டு சிறந்த நடனக்குழுவை உருவாக்கி, தன் நண்பனின் போலி வெற்றியை தகர்க்க முடிவெடுக்கிறார்.
இந்த சவாலில் பிரபுதேவா எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை. ஒரு பண்பட்ட, பக்குவப்பட்ட நடன இயக்குனராக ஆச்சரியப்படுத்துகிறார் பிரபுதேவா. இதுவரை இல்லாத அளவுக்கு அவர் நடிப்பில் அப்படி ஒரு சாந்தம், அமைதி. நண்பன் அவமானப்படுத்தி வெளியே அனுப்பும்போது, எந்த பதிலும் சொல்லாமல் தன் மேல் கோட்டை தூக்கி வீசிவிட்டுச் செல்லும் கோபம், இளைஞர்கள் தப்பு தப்பாக நடனம் ஆடும்போது பொறுமையோடு அவர்களை திருத்துவது, நடனத்தை தவறான பந்தயத்துக்குப் பயன்படுத்தும்போது அதில் ஜெயிக்க வைத்துவிட்டு, உடல் முழுக்க கோபம் கொப்பளிக்க வெளியேறுவது, கிளைமாக்சில் நடன கலைஞர்கள் குருவணக்கம் சொல்லும்போது பெருமை பொங்க ஆனந்த கண்ணீர் வடிப்பது என்று, பிரபுதேவா சீனுக்கு சீன் புதிதாக இருக்கிறார்.
படம் முழுக்க ஆடித் தீர்ப்பது தர்மேஷ் தலைமையிலான நடன குழுவினர்தான். ஆனாலும் பிரபுதேவாவின் அந்த ஒற்றை ஆட்டம் அனைத்துக்கும் உச்சம். போதைக்கு அடிமையான இளைஞன், மாஸ்டரின் பாலியல் தொந்தரவால் ஓடிவந்த வெளிநாட்டு பெண், உள்ளுர் கிளப் டான்சர், அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து சர்வதேச தரத்திலான நடன குழுவை உருவாக்க பிரபு படும் துயரங்களையும், தொழில் நுணுக்கங்களையும் லாஜிக் மீறாமல் தந்திருக்கிறார் இயக்குனர்.
மெல்லிய புன்சிரிப்புடன் வலம் வரும் கே கே மேனன், கேரக்டருக்கு அப்படி பொருந்துகிறார். “இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது ஆடியன்ஸ்தான். நடக்குறது போட்டியில்லை. ஷோ’ என்று பேசி வில்லத்தனமாக காய் நகர்த்து வதும், கிளைமாக்சில் பிரபுதேவாவிடம் தோற்றதும் அதே வில்லச் சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் நச். ஒவ்வொரு நடன கலைஞர்களும் உயிரைக் கொடுத்து ஆடியிருக்கிறார்கள், அதனை அதன் உயிர்ப்பு குலையாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்குமார் அரோரா.
ரீலுக்கு ஒரு டான்ஸ், ஒரு திருப்பம், ஒரு சென்டிமெண்ட் என படத்தை விறுவிறுப்பாகச் கொண்டு சென்றிருக்கிறார்கள். சச்சின் ஜிகாரின் பின்னணி இசை அபாரம். பாடல்களின் இசை தியேட்டரில் ஆட வைத்தாலும் மனதில் பதியவில்லை. பிரபுதேவா தவிர மற்ற அத்தனை கலைஞர்களும், கதை களமும் வடநாட்டை ஞாபகப்படுத்துவதால் கதையையும், நடனத்தையும் ரசிக்க முடிகிறதே தவிர மனசுக்கு நெருக்கமாக்கிக் கொள்ள முடிவில்லை.