வழக்கமான ஆள்மாறட்ட கதை தான். அதை வித்தியாசமாக சொல்கிறேன் பேர்வழி... என்று வழக்கமான தனது வெற்றி பார்முலாவில் இருந்து விலகிபோய், விக்கித்துப்போய் நிற்கிறார் அமீர்...!!
தாய்லாந்து கேடி ஆதி, மும்பை தில்லாலங்கடி பகவான். ஆதி - பகவான் இருவருமே ஜெயம் ரவி தான் எனும் சூழலில், மும்பை போலீஸ் மொத்தத்திற்கு படியளக்கும் பகவானை தீர்த்துகட்டியே தீர வேண்டும்
என்று போலீஸை நிர்பந்திக்கிறது மேலிடம்! ஆனாலும் கதாநாயகி நீத்து சந்திராவுக்கு தன் பகவானை காப்பாற்றியே தீர வேண்டும் என்பது திடமான எண்ணம். அதன்விளைவு, பகவானின் சாயலிலேயே தாய்லாந்தில் சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் ஆதியை காதலிப்பதாக சொல்லி மும்பைக்கு கடத்தி வரும் நீத்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி மும்பை போலீஸ் கஸ்டடிக்கு ஆதியை, பகவானாக அனுப்பிவிட்டு தன் பகவானுடன் செட்டில் ஆக கோவா வருகிறார். ஆதி, மும்பை போலீஸ்க்கு "பெப்பே காட்டிவிட்டு பகவானையும், பகவதியை (அதாங்க நீத்து...)யும் தேடிப்பிடித்து தீர்த்து கட்டுவதுதான் "ஆதி-பகவான்" மொத்த கதையும்!
ஜெயம்ரவி ஆதியாகவும், பகவதியை உள்ளடக்கி பகவானாகவும் இரட்டை வேடங்களில் படம் முழுக்க வருகிறார். ஏதேதோ செய்கிறார். ஆனால் நம் மனம் முழுக்க நிறையாமல் போகிறார். ஆரம்ப காட்சிகளில் ஆதியையாவது பார்க்க, ரசிக்க முடிகிறது. ஆனால் ஆண்பாதி, பெண்பாதியாக வரும் மும்பை பகவானை பார்த்தாலே குமட்டுகிறது. அதுவும் பெண் உருவில் இருக்கும் ஆணாக இருந்து கொண்டு, அவர் பார்க்கும் பெண்களை எல்லாம் மடிப்பதும், படுப்பதும் நம்பமுடியாத காமெடி! இதெல்லாம் நாங்க "அப்பு பிரகாஷ்ராஜிடமே பார்த்துட்டோம். ஜெயம் ரவியும், இயக்குனர் அமீரும் இன்னும் நிறைய யோசித்து இந்தபடத்தையும், அந்த பாத்திரத்தையும் செய்திருக்கலாம்!
கரீஷ்மா, ராணி என்று இரண்டு கெட்-அப்புகளில் ஒரே நீத்து சந்திரா. அப்படி ஆதியிடம் இல்லாதை பகவானிடம் எதை பார்த்தாரோ? என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை! க்ளைமாக்ஸில் ஆதி ரவியுடன் அவர் பறந்து பறந்து போடும் சண்டைக்காட்சி பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களை ஞாபகப்படுத்தினாலும் சபாஷ் ரகம்!
அனிருத், பாபு ஆண்டனி, மோகன்ராஜ், டார்ஜான், சுதாசந்திரன், கருணா, பகலா பிரசாத் பாபு, பாலாசிங், சரத் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள், யுவன்ஷங்கர்ராஜாவின் இனிய இசை, தேவராஜின் அழகிய ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் "ராம், "பருத்திவீரன் படங்களை இயக்கிய அமீரா "ஆதி-பகவன் படத்தின் இயக்குனர் எனக்கேட்கத் தூண்டுகிறது!
அதேமாதிரி இழுத்துக்கொண்டே போகும் க்ளைமாக்ஸ் பைட்டில், ஆதி-பகவான் இருவரில் ஒருத்தரை உடனடியாக கொல்லுங்கள், எங்களை கொல்லாதீர்கள் அமீர் என்று தியேட்டரில் ரசிகர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்க முடிவது "ஆதி-பகவனின் பலவீனங்களில் ஒன்று! இதில் இரண்டாம் பாகத்திற்கு வேறு அமீர் சிலைடு போடுவது படத்தை மேலும் பலவீனமாக்கிவிடுகிறது.