logicஐத் தூக்கி பத்திரமாக ஒரு இரும்புப்பெட்டிக்குள் போட்டு, அதுக்கு ஒரு பெரியதொரு பூட்டும் போட்டு, அதை ஒரு 100அடிக்கு கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு வந்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்!! படத்தின் trailersகளைப் பார்த்தும் அது உங்களிற்குப் புரியவில்லை என்றால், படம் தொடங்கி 5 நிமிசத்திற்குள்ளாவது உங்களிற்குப் அது புரிய வேண்டும். அதைப் பற்றி உங்களிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றால், இந்தப் படம் நல்லதொரு
பொழுதுபோக்கு விருந்து.
தனது வாழ்க்கையில் மிகவும் சலிப்படைந்த நிலையில் கணக்காளராக வேலை செய்பவன் Wesley. இவன் ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெண் வந்து, சின்ன வயதில் Wesleyஐக் கைவிட்டுவிட்டுப்போன அவனின் தகப்பனார் கொலை செய்யப்பட்டுவிட்டார் என அறிவிக்கிறாள். அத்தோடு Wesleyஐயும் அதே கொலையாளியிடமிருந்தும் காப்பாற்றுகிறாள். இதன்பின் தனது அப்பா ஒரு 1000 வருடம் பழமை வாய்ந்த ஒரு கொலையாளிகள் குழுவில் ஓர் அங்கத்தவர் எனவும் அறிகிறான் Wesley (கெட்டவர்களைக் கொன்று உலகில் அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு குழுவாம்!!) தந்தையின் வழியில் தானும் இணைந்து, தந்தையைக் கொன்றவனை பழி வாங்கவென திட்டம் தீட்டுகின்றான் Wesley. மிகுதி திரையில்.
படம் முழுவதும் special effectsஇல்தான் தங்கியிருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘அதிரடிக்கார மச்சான்’ பாட்டு வடிவில் முழுநீள திரைப்படத்தை எடுத்தால் எப்பிடியிக்குமோ அப்பிடி; என்றாலும் இவங்கள் special effectஇல பழம் திண்டு கொட்டை போட்டவர்கள் என்பதால் படம் கொஞ்சமும் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகப் போகின்றது! படத்தில கிட்டத்தட்ட ஒரு 10% slow motion, extreme slow motion, freeze motion, reverse slow motion என்று போகிறது!! கதை ஒரு comics புத்தகத்திலிருந்து தழுவப்பட்டது என்பதால் படத்தையும் ஒரு காமிக்ஸ் புத்தகம் மாதிரித்தான் எடுத்திருக்கின்றார்கள். “Mr & Mrs Smith”, “Sin City” போன்ற படங்களை நீங்கள் ரசிப்பவரானால் இதையும் ரசிப்பீர்கள். படத்தில் இரத்தம் சிந்தும் காட்சிகள் எக்கச்சக்கம், கூடவே அரை, முக்கால் நிர்வாணக்காட்சிகளும் உண்டு. எனவே யாருடன் இந்தப் படத்தை பார்க்கப் போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்.