சமீப காலமாக கட்டண உயர்வு என்ற வார்த்தையை கேட்டு கேட்டு அதிர்ந்து போயிருக்கும் மக்களின் நாடி துடிப்பை அதிமாக்கும் இன்னொரு செய்தி. மொபைல்போன் கட்டணங்களை 30 சதவீதம் வரை உயர்த்த தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கடந்த 2008-ஆம் ஆண்டு மொபைல்போன் கட்டணங்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிரடியாக குறைத்தன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கட்டண குறைப்பால் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட துவங்கியது.
இதனால் கணிசமான நஷ்டத்தை சந்திக்க நேர்ந்ததால், அதை ஈடு செய்ய கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20% சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் முதல் மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் 1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.ஆனால் இழப்பை ஈடு செய்ய முடியாததால் மீண்டும் கட்டண உயர்வை கையிலெடுக்க தொலை தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
மொபைல்போன் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்த பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டண சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.