பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்பால். தாயின் உடல் நிலை காரணமாகவும், சத்தான உணவு உண்ணாத காரணத்தினாலும் ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். இதற்காக உடனே பசும்பாலை காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கத் தொடங்கி விடக்கூடாது. ஏனெனில் புட்டிப்பால் ருசிக்கு பழகிய குழந்தைகள் தாய்பால் குடிக்க முரண்டு பிடிக்கத் தொடங்கிவிடும்.அதேபோல் தாய்மார்களும் நமக்கு வேலை லேசாகிவிட்டது என்று தாய்பால் பற்றி கவலைப்படாமல் வேறு வேலை
பார்க்கத் தொடங்கிவிடுவர். இது தவறாத பழக்கமாகும்.
தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவேதான் 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்பால் அவசியம் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தாய்ப் பால் சரியாக சுரக்காத தாய்க்கு வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனைக் கையாண்டால் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர்வதோடு தாய்க்கும் நன்மை ஏற்படும்.
வெள்ளைப் பூண்டு, கருப்பட்டி
பிரசவித்த பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் வெல்லக்கருப்பட்டியை சாப்பிட கொடுப்பார்கள். இதற்கான காரணம் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்லாது பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டுதான். ஏனெனில் வெள்ளைப் பூண்டு அதிகம் சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கும் வெள்ளைப் பூண்டு சிறந்தது.
அதேபோல் கருப்பட்டியில் உள்ள இரும்புச் சத்து தாயின் மூலம் தாய்பால் வழியாக குழந்தைக்குப் போய் சேரும். அதேபோல் பசும் பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். .கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
மிளகு ரசம், சுரைக்காய் கூட்டு
காரமாய் சாப்பிட்டால் பிரசவித்த வயிறுக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து பத்திய உணவு தயாரித்து கொடுப்பார்கள். அது அற்புத சுவையோடு தாய்க்கும், சேய்க்கும் ஏற்ற உணவாகும். மிளகும், கொடாம்புளியும் சேர்த்த ரசம், சுரைக்காய் கூட்டு சேர்த்து உண்பது தாய்பாலை அதிகம் சுரக்கச் செய்யும்.
அதேபோல் மீன், கருவாடு போன்றவைகளை காரம் குறைவாக வைத்து சமைத்துக் கொடுப்பார்கள். இது தாய்ப் பாலை அதிகம் சுரக்கச் செய்யும்.
மூலிகை கசாயம்
அமுக்கிராங் கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும். அதேபோல் தக்காளி இலைகளை ,காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும்.
சத்தான முருங்கைக் கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். அதேபோல் கல்யாண முருங்கை இலையும் பாசி பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்.