இவ்வளவு காட்டூன் படங்களை எடுத்துத் தள்ளிய பிறகும், இன்னுமொன்ரு காட்டூன் படத்தை எடுத்து சிரிக்கவைப்பதற்கும், வியக்கவைப்பதற்கும் இயலும் என்றால் Walt Disney தயாரிப்பாளர்களால்தான். ok, “Finding Nemo” அளவுக்கு நகைச்சுவை இல்லையென்றாலும் சந்தோக்ஷமாக படம் எடுத்திருக்கின்றார்கள். காட்டூன் தரத்திலும் Pixar அளவுக்கு தயாரித்திருக்கின்றார்கள்.
சிறுவயதிலிருந்தே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் வரும் அபாரிதமான சக்தி கொண்ட நாயாக நடிப்பதில் வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருக்கின்றது எமது கதாநாயகனான Bolt. கெட்ட சக்திகளிடமிருந்து தனது எஜமானியான சிறுபெண்ணை (Penny) காப்பாற்றுவதே தொலைக்காட்சித் தொடரில் Bolt’இன் வேலை. தொடரை மிகவும் தத்துரூபமாக எடுக்கவேண்டும் என்பதால் Bolt’க்கு உண்மையாகவே அபாரித சக்தியுள்ளதாகவே அதை நம்ப வைக்கின்றார்கள் எல்லோரும். இதனால் தொலைக்காட்சித் தொடரில் வருவதை எல்லாம் உண்மையாகவே நடப்பதாக நம்பி வருகின்றது Bolt. இப்படி இருக்கும் தருணத்தில், தொடரின் அங்கமொன்றின் இறுதியில் Bolt’இன் எஜமானி Penny’ஐ கெட்ட சக்திகள் கடத்தி விடுவதாக வடிவமைக்கின்றார்கள். அதை தத்துரூபமாக வைத்திருப்பதற்காக Penny உண்மையாகவே கடத்தப்பட்டதாக நம்பித் தவிக்கும் Bolt’ஐ அப்படியே விட்டுவிடுகின்றார்கள் — அடுத்த அங்கம் நன்றாக வரும் என்பதற்காக.
தவித்துப் போகும் Bolt, Penny’ஐ காப்பாற்றியே தீருவேன் என்று ஓடி அலைகையில், தவறுதலாக விரைவு-அஞ்சல் (courier) பெட்டியொன்றில் விழுந்து, அமெரிக்காவின் மேற்கு கரையில் இருக்கும் ஹாலிவூட்டிலிருந்து, கிழக்குக் கரையில் இருக்கும் நியூ யோர்க்கிற்கு ஆகாயவிமானம் மூலம் வந்துவிடுகின்றது. அதை அறியாமல் தொடர்ந்து எஜமானியைத் தேடி அலைகின்றது. நிஜ உலகில் தனது அபாரித சக்திகள் ஒன்றும் செயற்படாது போக மிகவும் குழப்பமடைந்து போகின்றது — அதற்கு விரைவு-அஞ்சல் பெட்டியினுள் இருந்த Styrofoam’தான் காரணம் என்று நம்புகின்றது! தொலைக்காட்சித் தொடரில் எதிரி சக்திகளுடன் இணைந்து செயற்படுவது பூனைக் கூட்டம். எனவே நியூயோக்கில் இருக்கும் தெருப் பூனையான Mittens’ஐ பணயக்கைதியாகப் பிடிக்கின்றது. Bolt’இன் குற்றச்சாட்டுகள் ஒரு மண்ணும் விளங்கவில்லை என்றாலும், பலத்தினால் Bolt’ஐ விட சக்தி குறைந்த Mittens கொஞ்சத்திற்கு ஒத்துப் பாடத்தீர்மானிக்கின்றது. Bolt’ன் நாய்ச் சங்கிலியிலிருக்கும் பட்டையிலிருகும் விலாசத்தை வைத்துக்கொண்டு Bolt கலிபோர்னியாவைச் சேர்ந்தது என்று அறியும் Mittens, Penny கலிபோர்னியாவிற்கு கடத்தப்பட்டிருப்பதாக Bolt’ஐ நம்பவைக்கின்றது. அதைத்தொடர்ந்து இருவரும் நாட்டைக் குறுக்கறுத்து பயணத்தை ஆரம்பிக்கின்றார்கள். இடையில் இவர்களுடன் இணைந்து கொள்வது Rhino என அழைக்கப்படும் ஒரு hamster. ஒரு தொலைக்காட்சிப் பைத்தியமான Rhino’விடமிருந்து Bolt பற்றிய மிகுதி உண்மையையும் உய்த்தறிகின்றது Mittens. இவர்களது பயணம் தொடர, கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை Bolt’க்கு உணரவைக்கின்றது Mittens. உண்மை முதலில் விரக்தியைத் தந்தாலும், Mittens’இனது முயற்சியால் மனம் தேறுகின்றது Bolt. இவர்களிற்கிடையிலான பகை, நட்பாகவும் வடிவெடுக்கின்றது. மிகுதிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, யாவரும் வீடு சேர்வது மிகுதிக் கதை.
தூக்கிக் கொஞ்சக்கூடிய அளவுக்கு அழகாக இருக்கும் Bolt’க்கு John Travolta குரல் கொடுத்திருப்பது அதியமாக இருந்தாலும், நன்றாகப் பொருந்திப்போகின்றது. சமிபத்தைய புகழ் teenage பாடகி Miley Cyrus‘இன் ஆம்பிளைக் குரல் பாடுவதற்கு பொருத்தமாக இருக்கலாம்; ஆனால் Penny’க்கு பின்னணிக் குரல் கொடுப்பதற்கு அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. படத்தில் வரும் மிருகங்களிற்கு நன்றாகவே உயிரூட்டியிருக்கின்றார்கள். முக்கியமாக அந்த கழுத்தை வெட்டி, வெட்டி பேசுகின்ற புறாக்களின் கதை நகைச்சுவையாகவும், இயல்பாகவும் இருக்கின்றது. அது ஏன் படத்தில நிறைய புறா வருகின்றது என்று இலங்கை, இந்தியாவிலிருந்து யாரும் குழம்ப வேண்டாம். அங்கே காகம் போல, வட அமெரிக்காவில் புறாக்களைத்தான் பார்க்கலாம். பெரிதாக புதுமை இல்லை என்றாலும், Walt Disney வழமைபோல அலுக்காமல் பார்ப்பதற்கு ஒரு படத்தை தந்திருக்கின்றது. அன்பும், நட்பும், தன்னம்பிக்கையும் அவசியம் என்னும் கருத்தையும் இழையோடியிருக்கின்றார்கள். சின்னஞ்சிறாரோரு பார்த்து மகிழுங்கள்.