எத்தனையோ யானைகளை நாம் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ராமணாராயனன் படங்களில் யானை கிரிகெட் ஆடும் காட்சிகளையும் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு யானை ஹீரோவுக்கு நிகராக நடிக்க முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார் பிரபு சாலமன். கும்கி எப்போ ரிலீசாகும் என்று யானையைப் போலவே எதிர்ப்பார்புகளும் பெருத்துப்போய் கிடந்தது. அது அத்தனைக்கும் விடை சொல்கிற
மாதிரி பிரம்மாண்டமாய் திரையில் கம்பீர நடை போடுகிறது கும்கி.
குமுளி தாண்டிய மலைக்காடுகளில் இருக்கும் ஆதிகுடிகளோட மலை கிராமம் தான் களம். அறுவடைக் காலத்தில் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை அழிப்பதும், ஆட்களை குத்திக் கொல்லுவதுமாக அசூரத்தனமான அட்டகாசங்களை செய்கிறது ஒரு காட்டு யானை. அரசாங்கமே அதை ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது. அறுவடையை நல்ல முறையில் செய்து முடிக்க, காட்டு யானையை எதிர்த்து சண்டைபோட சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்ட கும்கி யானையை ஊருக்குள் கொண்டு வருகிறார்கள் மக்கள்.
கோயில் யானையை கும்கி யானை என்று பொய் சொல்லி அந்த கிராமத்திற்கு கூட்டி வருகிறார் பொம்மன். தங்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக வந்திருப்பதால் அந்த ஊர் மக்கள் அவர்களை கடவுளாக பார்த்து மரியாதை செய்கிறார்கள். வந்த இடத்தில் அல்லியை பார்க்கிறார் பொம்மன். காதல் வருகிறது. அந்த ஊரைவிட்டு போக முடியாமல் தவிக்கிறார்.
ஒரு பக்கம் காட்டு யானை எப்போது வருமோ என்ற பரபரப்பு. இன்னொரு பக்கம் இவர்கள் காதல் ஊருக்கு தெரிந்துவிடுமோ என்ற விறுவிறுப்பு. தங்கள் இனத்துப் பெண்களை மற்ற ஊர்காரர்களுக்கு கட்டிக்கொடுப்பதில்லை என்ற ஊர்கட்டுப்பாடும் ஹீரோவுக்கு தெரியவருகிறது. கடைசியில் காதல் கைகூடுகிறதா? காட்டு யானைக் கொல்லப்படுகிறதா? என்பதே க்ளைமாக்ஸ்!
யானைப் பாகனாக பொம்மன் கதாபாத்திரத்தில் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு. சிவாஜியின் ஜாடையும் இல்லை. பிரபுவின் ஜாடையும் இல்லை. அசல் யானைப் பாகன் போலவே காட்சியளித்தார். விக்ரம் பிரபுவின் உயரம், உடல் அமைப்பு எல்லாமே பாகன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாய் அமைந்தது. யானையின் தந்ததின் மீது தண்டால் எடுப்பதும், காதலியை யானை மீது அமரவைத்து ஊரை சுற்றுவதும் என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மலைவாழ் பெண்ணாக அல்லி கதாபாத்திரத்தில் வருகிறார் லட்சுமி மேனன். அதே மாதிரியான சேலை, பாசி மணி. ஊசி மணி, காதில் ஏகப்பட்ட தோடுகள், சைடு வாங்கின மாதிரி ஒரு குதிரைவால் கூந்தல் என அசத்தியிருக்கிறார். அந்த மேக்கப் இல்லாத முகத்திலும் அவ்வளவு அழகு. பார்த்தவுடனே காதல் வருவதால், ஹீரோயினை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.
சமீபத்திய காலங்களில் வடிவேலு இல்லாத குறையை தம்பி ரமைய்யா தீர்த்து வைக்கிறார் என்றே சொல்லலாம். கொத்தல்லி என்ற கதாபாத்திரத்தில் காட்சிக்கு காட்சி கலாய்க்கிறார் மனுஷன். நக்கல் வசனங்கள், செண்டிமெண்டான நடிப்பு என தம்பி ராமைய்யா சக்கப்போடு போடுகிறார். பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார், சில இடங்களில் நெகிழவும் வைக்கிறார். நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்று அவரே சொன்னாலும், ஊரில் இருப்பவர்கள் அவரை சாகச வீரர் என்று புகழ் பாடுவது செம கலாட்டா. உண்டியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வினும் மனதில் நிற்கிறார்.
ஊர்தலைவர் மாத்தய்யாவாக வரும் ஜோ மல்லூரியும் அவருக்கு துணையாக இருக்கும் ஜூனியர் பாலைய்யாவும் அந்த இனத்து மக்கள் போலவே இருக்கிறார்கள், நடிப்பிலும் தோற்றத்திலும்.
இதில் மிக முக்கியமானவர் மாணிக்கம். அது தான் கும்கியாக நடித்திருக்கும் யானையின் பெயர். யானையின் கண், கால், காது என எல்லா அசைவுகளையும் அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்
இயக்குனர். பொம்மனுக்கும் யானைக்கும் இருக்கிற பாசம், அல்லிக்கு யானை மேல் இருந்த அன்பு என உறவுகளை உணர்வுகள் குறையாமல் காண்பித்திருக்கிறார் இயக்குனர்.
அடுத்தவர், இசையமைப்பாளார் டி.இமான். கும்கியின் நடையைப் போலவே கம்பீரமாய் கேட்கிறது டி.இமானின் இசை. ஆறு வெரைட்டியான பாடல்கள். ’சொல்லிட்டாலே அவ காதல...’ பாடல் இந்த ஆண்டின் மிக சிறந்த மெலோடி பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவரோடு சேர்ந்து பாடலாசிரியர் யுகபாரதியும் பிரமிக்க வைக்கிறார். எளிமையான வார்த்தைகளை காட்சிக்கு ஏற்ற கவிதையாக பாடல்களில் கொடுத்திருக்கிறார் யுகபாரதி.
படத்தின் அடுத்த பிரம்மிப்பு ஒளிப்பதிவாளர் சுகுமார். நம்ம ஊரையும் ஹாலிவுட் ஸ்டைலில் காட்ட முடியும் என்று அதற்காக முயற்சித்திருக்கிறார். அருவியின் உச்சிக்க்கு நம்மை அழைத்து சென்றதும், யானை நீந்தும் காட்சியில் தண்ணீருக்கு அடியில் நம்மை மூழ்கடிப்பதும் என யானைப் பார்ப்பது போலவே நம்மை காட்சிக்கு காட்சி பிரமிக்க வைக்கிறார். காட்டுக்கு நடுவே பாதை அமைத்த கலை இயக்குனர் வைரமாலனின் உழைப்பும் நன்றாகவே தெரிகிறது.
பிரபு சாலமோனை அவர் விருப்பத்துக்கு ஒரு படம் எடுக்க சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஒரு பெரிய பாராட்டு. சரியான கதை, கச்சிதமான கதாபாத்திரப் படைப்பு, வித்தியாசமான களம்,
நெருடல் இல்லாத கிராஃபிச்ஸ் காட்சிகள், என மீண்டும் மக்களை ஏமாற்றாத ஒரு படைப்பைக் கொடுத்த இயக்குனர் பிரபு சாலமோனுக்கு அடுத்து எடுக்கப் போகிற நல்ல படத்துக்கான வாழ்த்துகள்.