கௌதம் வாசுதேவ மேனனின் படங்களில் காதல் காட்சிகள் தனித்த பிரகாசத்துடன் இருக்கும். மின்னலே, காக்க காக்க படங்கள் உதாரணம். இவற்றைவிட வேட்டையாடு விளையாடு படத்தின் முதிர்ச்சியான காதல் இன்னும் உணர்வுபூர்வமானது.
விண்ணைத்தாண்டி வருவாயா படம் இளைஞர்கள் மத்தியில் புத்துணர்வை தந்தது. ஜெஸியை இன்னமும் இளைஞர் பட்டாளம் நினைவில் வைத்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் முழுக்க காதல்... காதல் அன்றி வேறில்லை என வந்திருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம். இளையராஜாவின் இசையும், பாடல்களும். திரையரங்குகளில் கல்லூரி, பள்ளிகளை கட்டடித்த மாணவர்களின் தள்ளு முள்ளு.
சரி, படம் எப்படி?
இந்தப் படத்தில் கதை என்ற வஸ்து இல்லை. வேண்டுமானால் எபிசோடுகள் என்று சொல்லலாம்.
எபிசோடு 1 - சின்னஞ்சிறு வயதில் நித்யா என்ற சிறுமியின் புத்தகத்தை ஒருவன் கீழே தள்ளிவிட வருண் என்ற சிறுவன் எடுத்துத் தருகிறான். இருவரும் நட்பாக பார்த்துக் கொள்கிறார்கள். காத்திருக்கும் நித்யாவை தவிர்த்து அருண் கிரிக்கெட் விளையாடப்போக நட்பு புட்டுக் கொள்கிறது.
எபிசோடு 2 - பள்ளிப் பருவம். அதே வருண், அதே நித்யா. புத்தகம் எதையும் எடுத்துத் தராமலே நண்பர்கள் துணையுடன் இருவரும் காதலிக்கிறார்கள். ஒருமுறை இன்னொரு மாணவனுடன் நித்யா பேசுவதைப் பார்த்து, உடனே வரப்போகிறாயா இல்லையா என வருண் கேட்க, இரண்டாவது முறை காதல் டமாலாகிறது.
எபிசோடு 3 - கல்லூரி பருவம். விழா ஒன்றில் இருவரும் சந்திக்க மீண்டும் காதல். வருண் தனது குடும்பச் சூழல் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த அவர்களுக்குள் சின்னதாக உரசல். மேல் படிப்புக்கு கோழிக்கோடு செல்லும் போது நித்யாவை உடன் அழைத்துச் செல்ல அவன் மறுக்க மீண்டும் ஊடல்.
எபிசோடு 4 - படிப்பெல்லாம் முடிந்து செட்டிலான பிறகு ஊடல் தணிந்து இருவரும் ஒன்று சேர்தல்.
வசதி கருதி கதையையும், சம்பவங்களையும் சுருக்கித் தந்ததாக நினைக்க வேண்டாம். இதுதான் படத்தின் கதையும், சம்பவங்களும். இந்த கூடல் ஊடல் நாடகத்துக்கு நடுவே மானே தேனே போட்டு ஒப்பேற்றியிருக்கிறார் கௌதம்.
அவ இவ்ளோ அழகுன்னு முன்னாடி தெரியாதுடா... போன்ற இளைஞர்களை குஷிப்படுத்தும் வசனங்களுடன் படம் நகர்கிறது. நாலு வசனம் முடிந்ததும் ஒரு பாடல். அதுவும் நாலே வரிகள். போகப் போக இந்த வசனங்கள் நீ என்னை அழைச்சிட்டுப் போயிருக்கலாம்.... நீ என்னை புரிஞ்சுக்கலை.... என்று குற்றம் சொல்வதாக மாறுகிறது. இங்கேயும் நாலு வசனத்துக்குப் பின் நாலுவரி பாடல். நீதானே என் பொன்வசந்தம் பாடல் இடைவேளைக்குப் பிறகு நீ....தானே.... என் பொன்வசந்ந்ந்தமாக... மாறி படுத்துகிறது.
படத்தின் ரசிக்கிற அம்சம் சமந்தா. எந்தக் கோணத்திலும் இம்சிக்கிற அழகு. நடிப்பும் ஓகே. நண்பராக வரும் சந்தானத்தின், கரண்டைக்கூட சொல்லிட்டு கட் பண்றாங்கடா, இந்த பொண்ணுங்க சொல்லாமலே நம்மை கட் பண்ணிடுறாங்க... போன்ற ஒன்லைன் காமெடி பெரிய ரிலீஃப். அப்புறம் அவருக்கு ஜோடியாக வரும் அந்த குண்டுப் பெண்ணின் நடிப்பும் மேனரிஸங்களும். ஜீவா பாவம். ஒருமாதிரி ஹாஃப் பாயில் கேரக்டர். அண்டர்ப்ளே என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்ளலாம்.
சின்ன வீடு, பெட்ரூம் வசதியில்லை என்று அண்ணனின் திருமணம் தடைபட்டதும் வீட்டுக்காக சம்பாதிப்பது என்று உடனே புத்தகப்புழுவாக ஜீவா மாறுவதும், அதுவரை மாய்ந்து மாய்ந்து காதலித்த பெண்ணுடன் காபி ஷாப்பில் இருக்கும் போதும் ஹால்டிக்கெட் தொலைத்தவரைப் போல் பதற்றப்படுவதும் படு செயற்கை.
கார், பங்களா என சொகுசாக வாழும் சமந்தா திடீரென சுனாமி பாதித்த பகுதியில் ஆறுமாதமாக பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவருக்கு அப்படியெல்லாம் எண்ணம் இருப்பதாக படத்தில் எந்தத் தடயமும் இல்லை.
தனியாக பாடல்களை கேட்டபோது இருந்த ஈர்ப்பு படத்தில் பார்க்கும் போது இல்லை. குறிப்பாக என்னோடுதான் வா வா என்று சொல்ல மாட்டேன் பாடல். காதல் படத்தில் இதனை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டாம்?
ஜீவா வேறொரு பெண்ணுடன் மணமேடையில் நிற்பதைக் கண்டு சமந்தா மருகும் இடத்திலும், ஜீவாவிடம் தனது காதலை சொல்லி அவரை ஏற்றுக் கொள்ளும் இறுதிக்காட்சியிலும் படம் லேசாக மனதை தொட்டுச் செல்கிறது. மற்றபடி,
கற்பனை வறட்சியுடன் கூடிய இழுவையான படம்தான் நீதானே என் பொன்வசந்தம். கதை, திரைக்கதை என்ற வாத்தியம் சரியில்லாதபோது எடிட்டிங், ஒளிப்பதிவு பக்க வாத்தியங்களைப் பற்றி குறிப்பிட ஏதுமில்லை.
பெரிய எதிர்பார்ப்புடன் படத்துக்கு வராதீர்கள் என்று கௌதம் கூறியிருக்கிறார். பெரிய என்ன... சின்ன எதிர்பார்ப்புகூட இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதிகம்தான்.