திருமணமாகி குழந்தைப் பெற்று, குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், 'வீட்டில் போரடிக்கிறதே... மீண்டும் நடிக்கப் போகலாமா' என யோசிப்பது நடிகைகள் வழக்கம். அப்படி நடிக்க வந்தவர்கள் பட்டியல் பெரிது. அந்த நீண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளார் மீனா. பெங்களூர் கம்ப்யூட்டர் எஞ்ஜினியரைத் திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு, நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு இப்போது இரண்டு வயது. இப்போது மீண்டும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள்
வருகின்றனவாம் மீனாவுக்கு. ஏற்கெனவே அவர் திருமணத்துக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும நடிக்க வருவேன் என்று சொல்லியிருந்தார்.
இப்போது தெலுங்கில் ஸ்ரீவாசவி வைபவம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே. நல்ல வாய்ப்புகள் வந்தன, ஒப்புக் கொண்டேன்," என்றார்.