படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல அது உங்கள் கற்பனையே என்று டைட்டிலேயே படம் துவங்குவதிலேயே படத்தில் கதையை தேட வேண்டிய மெனக்கடல் இல்லாமல் போய் விடுகிறது. சினிமா என்ற கட்டமைப்பு இல்லாமல் ஒரு நாளில் மதுபானக் கடையில் நடக்கும் சம்பவங்களை வைத்தே படம் எடுத்திருப்பது இயக்குனரின் தைரியம். காந்திஜெயந்திக்கு முந்தின நாள் மதுபான கடையின் பதிவுதான் முழுபடமும். குடி சரியா தவறா என்ற விவாதத்திற்குள் போகாமல் அதை நேரடியாக பதிவு செய்திருக்கிறார்.
கதை இல்லை என்று சொல்லிவிட்டு அங்காங்கே மதுபானக்கடைக்கு வருபவர்களின் வாழ்க்கையை படம் காட்டியிருக்கிறது.
முக்கியமான பாத்திரமாக பாரையே நடுங்க வைக்கும் பெட்டிசன் மணி அவர் அங்கங்கே வெளிப்படுத்தும் உண்மையான சிவப்பு சிந்தனை சிரிக்க வைத்தாலும் நிஜத்தில் யோசிக்க வேண்டியது. நாம் தள்ளாடுனாதான் அரசாங்கம் ஸ்டெடியா இருக்கும் என்று சொல்லும் போது கை தட்ட வைக்கிறார்.
சப்ளையர் முருகேசன் ரபீக் இரண்டு பேருக்குமிடையேயான நட்பு கோபமாகவும் விரோதமாகவும் வெளிப்படுத்தியது யதார்த்தம். பாட்டு பாடியே கட்டிங் கரெக்ட் பண்ணும் அந்த பெரியவர் அவர் வாயிலாக வெளிப்படும். பாடம் நடத்துற வாத்தியாரு குடிச்சிட்டு பாடம் நடத்தலாம் கேக்குற பசங்க குடிச்சிட்டு பாடம் கேட்க கூடாது என்கிற கேள்வி யதார்த்தம்.
சில நிமிடமே வந்தாலும் பாரில் பியரை வைத்துக் கொண்டு நெஞ்சில் அடித்து கோகி கோகி கோகிலா என்று புலம்பும் மாணவன் நல்ல பெயரெடுத்திருக்கிறான்.
ராமர், அனுமர் வேஷம் போட்டு ஒயின்ஷாப்புக்கு தண்ணியடிக்க வரும் பிச்சைக்காரர்கள் கடவுளை வைத்து பேசுகிற காட்சி மறக்க முடியாது.
ஆங்கிலத்தை மூலதனமாக வைத்து பர்ஸ் தொலைந்துவிட்டது என்று கேட்டு பிச்சை எடுத்து வந்து சரக்கடிக்கும் இளைஞர். போனிலே கடலை போடும் சப்ளையர் ரபிக் சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்.
குடியின்றி அமையாலகடா... பாடல் இசையிலும் ஒளிப்பதிவிலும் அருமை படத்திற்கு இரண்டுமே பலம்.
ஈரோடு வட்டாரத்தில் இருக்கும் சாதிய பிரச்சனையும் அழகாக காடு வித்து குடிச்சாலும் என்று சவடால் விடும் கதாபாத்திரம் மூலம் எடுத்து அதில் ஒரு மலம் அள்ளும் தொழிலாளியின் வலியை கூறியிருப்பது அருமை.
முழுக்க முழுக்க மதுபானகடையிலேயே கதை நடைபெறுவதால் எல்லா தரப்பும் படத்தில் ஒன்றி போவது என்பது சந்தேகமே.