பெருமான் - சினிமா விமர்சனம்


கம்பெனியில் வேலை கிடைத்தாலும் குறுக்கு வழியில் பணக்காரனாகி சொகுசு வாழ்க்கை வாழ விரும்புகிறார் ஹீரோ அர்ஜுன். அதற்கு வாய்ப்பு வருகிறது. வெளிநாட்டு நண்பர் ஒருவர் 500 கோடி ஹவாலா பணம் கடத்த உதவினால் 21 கோடி கமிஷன் தருவதாகச் சொல்கிறார். அர்ஜுனும் குறுக்குவழியில் சில தில்லுமுல்லுகளைச் செய்து உதவுகிறார். 21 கோடி ரூபாய் கிடைக்கிறது. அன்றிலிருந்து
அவர் வாழ்க்கை மாறுகிறது. அவர் நினைத்த மாதிரி ஜாலியாக வாழ முடியவில்லை. பணத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம். யாரைப் பார்த்தாலும் பயம். நண்பர்களை துரத்தி விடுகிறார். காதலி விலகுகிறார். பணம் உள்ளே வந்த பிறகு மற்றவை வெளியே செல்கிறது. இருந்தாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பணக்காரனாக முயற்சிக்கிறார். அது நடந்ததா என்பது கதை.
அர்ஜுன் புதுமுகமாக இருந்தாலும் மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். நண்பர்களிடம் தன் லட்சியத்தை கூறும்போது உள்ள ஆர்வம், ஒரு பெண்ணிடம் அடிவாங்கிவிட்டு வந்து கூலாக இருப்பது, அதே பெண் மன்னிப்பு கேட்பதையே காதலாக மாற்றுவது, பணம் கிடைத்ததும் அதை செலவு செய்யவும் முடியாமல், பாதுகாக்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பு, போலீசிடமும், வில்லனிடமும் மாட்டிக் கொள்ளும்போது மொத்த அவமானத்தையும் வெளிப்படுத்துவது என்று நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.
அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கிறார் ஸ்ருதி. விளையாட்டில் ஆரம்பித்த மோதல் காதலாகும் தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் வில்லன் ஸ்ரீராம் வேதம்.  நீ போலீஸ்ல மாட்டிக்கிட்டா, எங்களை காப்பாத்திக்க என்ன வேணாலும் செய்வோம்  என்று மிரட்டும் யதார்த்த வில்லனாக நடித்திருக்கிறார்.
அதிக பணம் இருக்கும் பயத்தில், யதார்த்தமாக நடப்பவற்றை தனக்கு எதிராக நடப்பதாக அர்ஜுன் கருதுவது, அதற்கு அவர் ரியாக்ஷன் கொடுப்பதுமான திரைக்கதை சுவாரஸ்யம். காட்சியின் தேவை அறிந்து அளவாக, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சி.ஜே.ராஜ்குமார், இரவு நேர சென்னை நகர அழகையும், சிறிய அறையில் ஹீரோவின் தவிப்பையும் நமக்கு உணர்த்துவதில் கேமராவின் பங்கு அதிகம்.
விக்ரம் சாரதியின் பின்னணி இசையும் ஓகே‌.
500 கோடி ரூபாய் ஹவாலா டீலிங்கை முன்பின் அனுபவமில்லாத ஒருவரிடம் ஒப்படைப்பார்களா என்ன? கிடைக்கும் கமிஷன் பணத்தை மறைத்து வைக்க கிராமத்தில் சொந்த வீடு இருக்கும்போது அபார்ட்மென்ட்டில் தலையணைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தவிப்பது புத்திசாலித்தனமாக தெரியவில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பெருமான் பேசப்பட்டிருப்பார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget