நெல்லி (Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதுஇந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
nandaplan.blogspot.com |
வளரியல்பு
நெல்லி கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களை கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்து, கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய்.
மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காய்களையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.
அடங்கியுள்ள சத்துக்கள்
- புரதம் - 0.4 கி
- கொழுப்பு - 0.5 கி
- மாச்சத்து - 14 கி
- கல்சியம் - 15 மி.கி
- பொஸ்பரஸ் - 21 மி.கி
- இரும்பு - 1 மி.கி
- நியாசின் - 0,4 மி.கி
- வைட்டமின் ´பி1` - 28 மி.கி
- வைட்டமின் ´சி` - 720 மி.கி
- கரிச்சத்து
- சுண்ணாம்பு
- தாதுப் பொருட்கள்
- கலோரிகள் - 60
- இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.
பயன்தரும் பாகங்கள்
இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை
மருத்துவப் பண்புகள்
இரு வகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியை தருபவையாகும். கோடை காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திற்கும் சஞ்சீவி போன்றதாகும். எனவே நெல்லிக்காயை எந்தவிதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது என்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
பழத்தில் உள்ள விதைகள் சத்திற்கு நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு.
நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு அயர்ன் உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் கறுப்புக் கலந்த பழுப்பு நிறம்.
புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘திரிபலா’ என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.
உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயேரிக்கப்படுகின்றன. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவ பயனுள்ள பகுதியாகும்.
இலைகளின் சாறு நாட்பட்ட புண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினைத் தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மை கொண்டவை. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. பழங்கள் அதிகமாக மசி தயாரிக்கவும் தலை கழுவி நீர்மம் தயாரிக்கவும், பட்டைகளுடன் சேர்ந்து சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. “ஸ்கர்வி” என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் ஏற்படுகிறது. இச்சத்துக் குறைவை இக்கனி ஈடு செய்கிறது. இரும்பு சத்து மிகுந்து காணப்படுவதால், கேசப் பராமரிப்பில் சிறந்த ஊக்குவியாகவும், சாயமேற்றும் பொருளாகவும் பயன்தருகிறது.
வற்றலுக்கு நெல்லி முள்ளி என்று பெயர்.
நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.
நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க “திரிபலா” சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.
நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.
கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.
நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.
உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயை பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையை குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.
தமிழ் இலக்கியத்தில் இடம்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அந்நெல்லிக்கனியை தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்குமிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.