அருண் விஜய் நடிப்பில் வெகு நாளாய் தயாரிப்பில் இருந்து, தற்போது வந்திருக்கும் படம்தான் "தடையறத் தாக்க'. நாயகன் அருணுக்கும், நாயகி மம்தாவுக்கும் ரொம்பவே முக்கியமான படம். டிராவல்ஸ் நடத்தும் அருண் விஜய், காதலி மம்தாவை மணந்து அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். ஆனால் அவர் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. அருண் விஜய்யின் நண்பர் ஒருவர் கந்துவட்டி தாதாவிடம் கடன் வாங்கிவிட்டு,
அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போக, தாதாக் கூட்டம் அவரைக் கடத்திச் செல்கிறது. இப்படி ஒரு நிலையில் நிர்க்கதியாக நிற்கிறார் நண்பரின் மனைவி. அவருக்கு உதவப்போய் தாதாவின் கோபத்துக்கு ஆளாகிறார் அருண் விஜய்.
இது போதாதென்று அந்த நேரம் பார்த்து தாதா கூட்டத் தலைவனை யாரோ கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட, தாதாவைக் கொல்ல பயன்படுத்திய கிரிக்கெட் மட்டையின் ஒரு பகுதி அருணின் காருக்குள் கிடக்கிறது. இதைக் கண்காணிக்கும் தாதா கூட்டம், கொலையாளி அருண்தான் என்று முடிவு செய்து, அருணையும் அவருக்கு வேண்டப்பட்டவர்களையும் வேட்டையாடத் தொடங்குகிறது.
தனி ஒரு மனிதனாக நின்று அவர்களை தும்சவம் செய்கிறார் அருண். இந்த ஆக்ஷன் கலவையோடு தாதா தலைவனைக் கொலை செய்தது யார்? காதலியைக் கரம் பற்றினாரா அருண்விஜய்? என்பதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிக் கதை.
போன படத்தில் (மலை.. மலை..) அருண் டிரைவராக வந்தார். இந்தப் படத்தில் ஒரு டிராவல்ஸ் ஓனராக முன்னேறிருக்கிறார். இந்தப்படத்தில் அருணுக்கு முரட்டுத் தனமான, அதே நேரம் உள்ளுக்குள் பாசம் வழிந்தோடும் - பாத்திரம்.
இது ஆக்ஷன் படம் என்பதால் காதல், கத்திரிக்காய், டூயட் என்று வழவழவென்று இழுக்காமல் படம் தொடங்கியதுமே வேகமெடுத்து த்ரில்லாக ஓடுவது அலுப்பு ஏற்படாமல் இருக்கிறது.
கார்ப்பரேட் கம்பெனி கான்டிராக்ட் கிடைத்ததும் சந்தோஷம் அடையும் அருண், மம்தாவின் வீட்டுக்கு சென்று, யதார்த்தமாக பேசுவதும், "யாரும் எதுவுமே இல்லாம இங்க வந்தேன். வேலை, நண்பர்கள், காதல், வாழ்க்கை எல்லாமே கிடைச்சுது. எல்லாத்தையும் விட்டுட்டு எப்படிடா போகமுடியும்?' என்று கதறுவதும் இயல்பான நடிப்பு.
மம்தா வழக்கமான அதே சினிமா கதாநாயகி. நாயகனுடன் முறைப்பு, அணைப்பு, பாட்டு, சின்னச் சின்ன கோபம் என்று எல்லாவற்றையும் முறைப்படி செய்கிறார். இவரது காதல் காட்சிகள் அனைத்தும் கண்களுக்குக் குளுமையாக இருக்கிறது. ஆனால் ஐந்தாவது வரை மட்டுமே படித்த அருணை இவர் ஏன் காதலிக்கிறார் என்பதற்கு எந்தவித காரணமும் வைக்காமல் காதலிக்க வைத்திருப்பதுதான் நெருடுகிறது.
படத்தில் வில்லன்களாய் வலம் வருகின்ற மகா, குமார் ஆகியோரின் கொடூரமான குணங்கள், அடக்குமுறைகள், குரூரங்கள் அனைத்தும் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றன. இவர்களது வில்லத்தனமான நடிப்பு நம்மை சில இடங்களில் உறைய வைக்கிறது.
ஆனால் படம் முழுக்க வன்முறையும், ஆபாசப் பேச்சுக்களும் விரவிக் கிடப்பதால் முகம் சுளிக்காமல் படம் பார்க்க முடியவில்லை. ரவுடியிச வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை மறுமுறையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.
வழக்கம் போல் முதல் பாதியில் அதிகமாய் எதுவும் இல்லை. ஆரம்ப காட்சிகளில் சகோதர வில்லன்களின் அறிமுகம், அவர்களுக்கான ஒரு கொடூர குணம், ரொப்பவே பார்த்துப் பழகிய நாயகன் நாயகி அறிமுகம், ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, நாயகன் - வில்லன் உரசல் எனப் பயணித்தாலும் படத்தின் சுவாரஸ்யத்தாலும், த்ரில்லர் திரைக்கதையாலும் படம் வேகமாகப் போகிறது.
இப்படத்தில் இரண்டு பாடல்கள். தமனின் இசையில் குத்தாட்டப் பாடலான "பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான்..' பல முறை கேட்டலுத்த மெட்டு. ஒரு மெலடி. படத்தின் பின்னணி இசையில் கொஞ்சம் பயமுறுத்துகிறார்.
"மைனா' சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. பிரவீன் ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு திரில்லர் கதைக்கேற்ற வேகத்தை கொடுத்திருக்கிறது.
நாயகன் என்னதான் சூராதி சூரனாக இருந்தாலும் அரிவாளைக் கொண்டே பலரை வெட்டி சாய்ப்பது எந்த ஊரில் நடக்குமோ? போலீஸ் கண்டுபிடிக்க வேண்டிய கொலைக் குற்றவாளியை தாதாக்களே செய்கிறார்களே.. அப்படியா நாட்டில் தாதா ஆட்சி நடக்கிறது?
வழக்கமான ரவுடியிசக் கதைதான் என்றாலும், அதற்குள் கந்து வட்டிக் கொடுமையின் தாக்கத்தை சொல்லி, அதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி, படத்தைப் பரபரவென நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அதனால் படம் தடை உடைத்துத் தாக்குகிறது!