தமிழ் சினிமாவில் திகில் படங்களைப் பொறுத்தவரை அத்தி பூத்ததுபோல் எப்போதாவதுதான் திகில் படங்கள் வெளிவருகின்றன. திகில் படம் என்று ரிலீஸ் செய்யப்பட்டாலும் 'பொல்லாங்கு' திகிலை உருவாக்க முயற்சித்திருக்கிறது. தேனிலவைக் கொண்டாட காட்டுக்குள் போன ஒரு ஜோடியை (ராகுல் – ஜான்ஸி) நான்கு பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாகத் துரத்துகிறது. ஜான்ஸியும் அவள் கணவன் ராகுலும் வண்டியில்… அவள்தான் வண்டி ஓட்டுகிறாள். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவள் எடுக்கும்
முயற்சியில் பக்கத்தில் இருக்கும் ராகுல் எந்த உதவியும் செய்யாமல் வெறுமனே நிற்கிறான். ஏன் இவன் இப்படி இருக்கிறான்… என நமக்குள் சந்தேகம் தோன்றுகிறது. அதற்கு விடையை இரண்டாம் பாதியில் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
படத்தின் பின்பாதியில் தேனிலவு சென்ற இடத்தில் நாயகி இயற்கையை புகைப்படம் எடுக்கப்போக, அங்கே பெண்களை கொடுமைப்படுத்தி, ஆபாச படம் எடுத்து இண்டர்நெட்டில் விட்டு சம்பாதிக்கும் கும்பலை பார்க்கிறாள். அதை ரகசியமாக படமெடுத்துவிடுகிறாள்.
இதை பார்த்துவிட்ட அந்த கும்பல் இவளை தீர்த்துக்கட்ட கிளம்புகிறது. இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை சஸ்பென்ஸ், த்ரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் அழகாக நடித்திருப்பது நாயகிதான். படத்தின் ஒவ்வொரு பிரேமும் இவரைச் சுற்றியே நகர்கிறது. அறிமுகம் என்றாலும் பல படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர்போல் நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கும் உண்டு. ஹீரோவுக்கு அவ்வளவாக நடிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.
படம் ஆரம்பித்ததிலிருந்து இடைவேளை வரை நாயகி காரை ஓட்டிக் கொண்டே இருக்கிறார். ஹீரோ அவளுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார். இதற்கான காரணத்தை கிளைமாக்ஸில் சஸ்பென்ஸ் வைத்தது கலக்கல். இயக்குனர் காந்தி மார்க்ஸ்-ஐ இந்த விஷயத்துக்காக பாராட்டலாம்.
வினோத்குமாரின் ஒளிப்பதிவில் காடுகளின் குளுமை இருக்கிறது. கார் சேஷிங் சீனிலும் நன்றாக விளையாடி இருக்கிறார். ஒளிப்பதிவுக்கான திறமையை காட்டவேண்டிய படமாதலால் புகுந்து கலக்கியிருக்கிறார்.
ஜூபின் பின்னணி இசை வேகமும், திகிலும் கலந்து பார்ப்பவர்களை மிரட்டியிருக்கிறது.
படத்தில் ஒருசில காட்சிகள் திகிலுடன் நகர்கின்றன. அதே திகில் படம் முழுவதும் இருந்திருந்தால் நிச்சயம் பொல்லாங்கு பேசப்படும்படியான திகில் படமாக வந்திருக்கும்.