தாண்டவம் கதை - புதிய தகவல்


தாண்டவம் கதைத் திருட்டு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் என்ற சினிமா சங்கத்தில் இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை இந்த விவகாரம் மேலே கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி மேலும் பல பிரச்சனைகள் வெளிவரவும், அலசப்படவும் வாய்ப்புள்ளது.
இதற்கு பிள்ளையார் சுழிபோட்ட தாண்டவம் கதைத் திருட்டு குறித்துப் பார்ப்போம்.

ராதாமோகனின் உதவி இயக்குனரான பொன்னுசாமி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவரைப் பற்றிய கதையை தயார் செய்து யு டிவி தனஞ்செயனிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் அப்புறம் பார்க்கலாம் என்று வழியனுப்பியிருக்கிறார். கவனிக்கவும், கதை நன்றாக இல்லை என்று அவர் கூறவில்லை.

இதனால் பொன்னுசாமி தனஞ்செயனிடமிருந்து அழைப்பு வரும் முதல் படத்தை தொடங்கலாம் என்று ஆர்வத்தோடு காத்திருந்திருக்கிறார். ஆனால் வந்தது யு டிவி தயா‌ரிப்பில் விஜய் இயக்க விக்ரம் நடிக்கும் தாண்டவம். இதில் விக்ரம் கண் தெ‌ரியாதவராக நடிக்கிறார் என்ற விவரம் படம் ஏறக்குறைய முடிந்த பிறகே தெ‌ரிய வந்தது. பொன்னுசாமி பதறிப் போனார். கண் தெ‌ரியாவிட்டாலும் காதால் பொருட்களின் எதிரொலியை கேட்டு கண் தெ‌ரியாத குறை தெ‌ரியாமல் சாகஸங்கள் செய்யும் நாயகனை வைத்தே பொன்னுசாமி கதை செய்திருந்தார். அது அப்படியே தாண்டவத்தில் இருந்தது.

தான் ஏமாற்றப்பட்டது தெ‌ரிந்ததும் பொன்னுசாமி பிரச்சனையை இயக்குனர்கள் சங்கத்துக்கு எடுத்துப் போனார். அதன் பிறகே தாண்டவம் அண்ட் கோ விழித்துக் கொண்டது. பல்டிகள் அடிக்க ஆரம்பித்தார் தனஞ்செயன். தெய்வத்திருமகள் படத்தின் போதே விஜய் இந்தக் கதையை தன்னிடம் சொன்னதாக கூறினார். இன்னொரு சமயம் நீரவ்ஷா அமெ‌ரிக்காவில் உள்ள டேனியல் கிஷ் பற்றி சொன்னார், அதை வைத்து உருவாக்கிய கதையிது என்று பிளேட்டை திருப்பிப் போட்டார். உச்சகட்டமாக பொன்னுசாமி சொன்னது கண் தெ‌ரியாத ஒருவர் பழி வாங்குகிற கதை. இதை இயக்குனர் சுபாஷ் சபாஷ் என்ற பெய‌ரில் ஏற்கனவே பார்த்திபனை வைத்து எடுத்திருக்கிறார், நியாயப்படி சுபாஷ்தான் பொன்னுசாமி மீது புகார் தர வேண்டும் என்று சுக்கானை பொன்னுசாமி மீது ஏற்றப் பார்த்தார். இதன் பிறகு பொன்னுசாமியின் ஸ்கி‌ரிப்டும், விஜய்யின் ஸ்கி‌ரிப்டும் இயக்குனர்கள் சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உதவி இயக்குனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தில் நடந்தவை யு டிவி என்ற பெருநிறுவனத்துக்கு குடை பிடிக்கும் விஷயங்களாகவே இருந்தன. விசாரணை விஷயங்கள் படு ரகசியமாக வைக்கப்பட்டன. இரண்டு ஸ்கி‌ரிப்டும் ஒன்றா இல்லை வேறு வேறா என்பதைக்கூட தெ‌ளிவாக அறிவிக்கவில்லை. இரண்டு ஸ்கி‌ரிப்ட்களை படித்து முடிவு எடுக்க அதிகபட்சமாக இரண்டு நாள் போதும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். இந்த நேரத்தில் தாண்டவத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கி ‌ரிலீஸுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்தன. இயக்குனர்கள் சங்கம் பிரச்சனை முடியும்வரை தாண்டவம் பட வேலைகளை நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில், பல கோடி முதலீடு செய்திருக்கிறார்கள், அது பாதிக்கப்படும் என்று பெருநிறுவனத்தின் நலனே முக்கியமாகப் பேசப்பட்டது. 

படம் ‌ரிலீஸ் தேதியை நெருங்கினால் நீதிமன்றம் படத்துக்கு தடை விதிக்காது என்பதை தெ‌ரிந்தே இயக்குனர்கள் சங்கம் காலதாமதம் செய்தது. கடைசியில் அவர்கள் கைவி‌ரித்த போது பொன்னுசாமி நீதிமன்றத்தை நாடினார். அவர்கள் எதிர்பார்த்தது போல், பல கோடி நஷ்டமாகிவிடும் என்று சொல்லி நீதிமன்றம் படத்தை இன்று வெளியிட அனுமதி அளித்து விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

இந்த விவகாரத்தில் அமீர் பொதுச் செயலாளராக இருக்கும் இயக்குனர்கள் சங்கம் நடந்து கொண்டவிதம் பொன்னுசாமி உள்ளிட்ட உதவி இயக்குனர்களின் முதுகில் குத்துவதாகவே இருந்தது. இதனால் கோபம் கொண்ட உதவி இயக்குனர்களின் புதிய அலைகள் அணியைச் சேர்ந்த ஏழு செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ரா‌ஜினாமா செய்தனர். மேலும் சங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஜனநாதன், கரு.பழனியப்பன் முக்கியமாக அமீர். இந்த மூவரும் துரோகம் செய்துவிட்டதாக உதவி இயக்குனர்கள் வெளிப்படையாக குற்றம்சாற்றியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சங்கத்தின் நலனை பாதுகாக்க என்று தியாகி போர்வையில் ஒரு அறிக்கை வெளியிட்டு பதவியை ரா‌ஜினாமா செய்திருக்கிறார் அமீர். 

யு டிவிக்கும், இயக்குனர் விஜய்க்கும் காப்பி கை வந்த கலை. விஜய் இயக்கிய முதல் படம் கி‌‌ரீடமும், அடுத்து இயக்கிய பொய் சொல்லப் போறோம் படமும் முறையே மலையாளத்திலிருந்தும், இந்தியிலிருந்தும் முறையாக உ‌ரிமை வாங்கி தழுவியது. மதராசப்பட்டணம் டைட்டானிக், லகானின் மலிவான கலவை. ஐயம் சாம் படத்தின் அப்பட்ட காப்பி தெய்வத்திருமகள். இந்தப் படம் தனது சொந்த கற்பனை என்று இன்றுவரை சொல்லி வருகிறார் விஜய். இதற்கு தனஞ்செயன் ஆதரவு. தெய்வத்திருமகள் ஐயம் சாமின் காப்பி என்பது தெ‌ரிந்ததும் கருந்தேள் கண்ணாயிரமும், ஹாலிவுட் பாலாவும் இதனை ஐயம் சாம் படத்தை தயா‌ரித்த நியூலைன் சினிமாவுக்கு தெ‌ரியப்படுத்தினர். அவர்கள் யு டிவி-யை தொடர்பு கொண்டு விசா‌ரித்திருக்கின்றனர். தெய்வத்திருமகள் படத்தைப் பார்த்த நியூலைன் சினிமாவின் லீகல் டீம் பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இரண்டு கோடி ரூபாய் யு டிவி தந்ததாக கருந்தேள் கண்ணாயிரம் தனது வலைதளத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். இது கருந்தேளின் நண்பர் லீகல் டீமை கேட்டு வெளியிட்ட தகவல் என்று கருந்தேள் குறிப்பிட்டுள்ளார்.

ஆக, விஜய்யும், தனஞ்செயனும் பொன்னுசாமியின் கதையை பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்புவதற்கு அதிக சாத்தியமுள்ளது.

பொன்னுசாமியின் டிமாண்ட் படத்தின் டைட்டிலில் கதை, திரைக்கதை பகுதியில் தனது பெயர் போட வேண்டும், அதற்கான நியாயமான சம்பளம் தரப்பட வேண்டும். நமக்குக் கிடைத்த தகவலின்படி பணம் தர யு டிவி தயார். ஆனால் பொன்னுசாமியின் பெயரைப் போட மறுத்திருக்கிறார்கள். இவ்வளவு ஆனபிறகு பணம் முக்கியமில்லை பெயர்தான் வேண்டும் என்பது பொன்னுசாமியின் தரப்பு.

நீதிமன்றத்தில் யு டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யு டிவி-யிடம் பொன்னுசாமி கதை சொன்னதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டு படத்தை வெளியிட அனுமதி வாங்கியிருக்கிறார். இதுவே ஒரு பொய்தான். பொன்னுசாமி என்னிடம் கதை சொன்னார், அவர் மனது புண்படக் கூடாது என்று எதுவும் சொல்லாமல் அனுப்பினேன், பொன்னுசாமியின் கதை சபாஷ் படக்கதையை போன்றது என்றெல்லாம் தனஞ்செயனே பேசியிருக்கிறார். ஆனால் அவர் சார்பில் ஆஜரானவர், கதை சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதிலிருந்தே இவர்களின் இரட்டை வேடத்தை பு‌ரிந்து கொள்ளலாம்.

இந்த விவகாரத்தில் இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் நடந்து கொண்டதற்கு எந்தவிதத்திலும் குறையாத புறக்கணிப்பை மீடியாக்களும் வெளிப்படுத்தின. பொன்னுசாமி தாண்டவத்துக்கு தடைகோ‌ரிய வழக்கு குறித்து பெரும்பாலான பத்தி‌ரிகைகளும், இணையதளங்களும் செய்தி வெளியிடவில்லை. யு டிவி என்ற பெருநிறுவனத்தை பகைத்துக் கொண்டால் தொழில் நடத்த முடியாது என்ற பயம். நியாயம் யார் பக்கம் என்று எழுத வேண்டாம், குறைந்தபட்சம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையாவது தெ‌ரியப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்ய‌த் தயங்கியவர்கள் நீதிமன்றம் தாண்டவத்தை வெளியிட அனுமதியளித்ததை மட்டும் பெ‌ரிதாக வெளியிட்டு கொண்டாடுகிறார்கள்.

இந்த விவகாரம் ஏதோ நமீபியாவில் நடப்பது போல் இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இதுவரை கருத்து எதுவும் தெ‌ரிவிக்காமல் இருக்கிறார். அநீதிகளை வேரறுக்கும் சாகஸ நாயகன் விக்ரம் வாயே திறக்கவில்லை. 

உதவி இயக்குனர்கள் முதலான பல‌ரின் மூளை உழைப்பை சில சுயநலமிகளும், பெருநிறுவனங்களும் தொடர்ந்து சூறையாடி வருகிறார்கள். அந்த திருட்டுப் பூனைகளுக்கு இந்த விவகாரத்தின் மூலம் மணி கட்ட முடிந்தால் நல்லது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget