
கோடம்பாக்கத்தில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஹீரோக்கள் கனவுகளோடு வருகின்றனர். அவர்களில் சில நூறு பேர் ஏதோ ஒரு வாய்ப்பு பெறுகின்றனர். சில பத்து பேருக்கு ஹீரோ அதிர்ஷ்டம் அடிக்கிறது, ஆனால் அவர்கள் அனைவராலும் ஜெயிக்க முடிவதில்லை. 2012-ம் ஆண்டிலும் ஏகப்பட்ட ஹீரோக்கள் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முகங்களும் அவர்கள் நடித்த படங்களும் நினைவிலேயே இல்லாமல் போனது கொடுமை.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை நிச்சயம் ஒரு புதுமுகமாகப் பார்க்க முடியாது. காரணம், அவர் ரொம்ப காலமாகவே சினிமாவில் முட்டி மோதிக் கொண்டிருந்தவர். ஆனால் 2012-ல்தான் பளிச்சென்று வெளியில் தெரிந்தார். அவரை வெற்றிகரமான ஹீரோவாக்கியது பீட்சா படம். அடுத்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பட வெற்றி அவரை ஒரு கோடி வாங்கும் ஹீரோக்கள் லிஸ்டில் சேர்த்திருக்கிறது.
சிவகார்த்திகேயன்
டிவி தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயனை மெரினா மூலம் ஹீரோவாக்கினார் இயக்குநர் பாண்டிராஜ். அந்தப் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்தார். அடுத்து மனம் கொத்திப் பறவை. அதில் இவரது நடிப்பு மட்டும்தான் சொதப்பல். இருந்தாலும் தனுஷ் சொந்தத் தயாரிப்பில் இவர் ஹீரோவாக நடிக்கும் எதிர்நீச்சல் ஒரு நிலையான இடத்தைத் தரும் என நம்புகிறார்.
விக்ரம் பிரபு
இந்த ஆண்டின் பளிச்சென்ற அறிமுகங்களில் ஒருவர். நடிகர் திலகம் பேரன், பிரபு மகன் என்ற பின்னணி அவரை கும்கி மூலம் ஹீரோவாக்கிவிட்டது. படத்தின் வெற்றி காரணமாக, பல முன்னணி இயக்குநர்கள் தேடும் முக்கிய ஹீரோவாகிவிட்டார் விக்ரம் பிரபு.
விஜய் ஆன்டனி
இவர் நடிப்பதாக செய்தி வந்த போது, 'எதற்கு வேண்டாத வேலை... இசையமைப்பாளராக நல்லாதானே போய்க்கிட்டிருக்கு', என்று கமெண்ட் அடித்தனர். ஆனால் நான் படம் வெளியானபோது, 'அட பரவால்லியே.. நல்லா பண்ணியிருக்காரே' என்று பாராட்டினர். அந்த பாராட்டுகளே அவருக்கு உற்சாக டானிக் ஆக, இப்போது திருடன் படத்ததை தயாரித்து நடிக்கிறார். ஆனால் வெளிப் படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
உதயநிதி ஸ்டாலின்
2012-ன் முக்கிய அறிமுகம் உதயநிதி ஸ்டாலின். இவரே தயாரித்து நடித்து அறிமுகமான அந்தப் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த ஆண்டின் நம்பர் ஒன் ப்ளாக்பஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும், பணத்துக்குப் பஞ்சமில்லாத உதயநிதி ஸ்டாலின், 2013-ல்தான் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீ & லகுபரன்
இவர்களைத் தவிர வழக்கு எண் 18/9-ல் நடித்த ஸ்ரீ ஒரு முக்கிய அறிமுகம்தான். ராட்டினம் பட ஹீரோ லகுபரன் வெகு இயல்பான நடிகராக ஜொலித்தார். அட்டகத்தியில் அறிமுகமான ரஞ்சித்தும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க புதுமுகமாகும்.