
21-12-2012 அன்று உலகம் அழியுமா என்ற கேள்வி இப்போது உலகளவில் அனைவரிடத்திலும் ஒரு பயம் கலந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே பரவலாக பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட, ஆலோசிக்கப்பட்ட இத்தலைப்பு, மாயன் நாட்காட்டியில் உலகம் அழியும் என்று குறிப்பிடப்பட்டுள்ள தேதி (21-12-2012) நெருங்க நெருங்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேறு வார்த்தைகளில் விவரிக்க வேண்டுமென்றால், வெறும் வாயை மெல்கிறவனுக்கு சிறிது அவல் கொடுத்த கதை போல இந்த மாயன் நாட்காட்டியின் அட்டகாசம் பட்டித்தொட்டி எல்லாம் பரவி மாபெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
இவ்வளவு பரபரப்பிற்கு காரணமாக இருக்கும் மாயன் நாட்காட்டி பற்றிய தகவல்களையும், மாயன் நாட்காட்டிக்கும் உலக அழிவிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்
மாயா நாகரீகம் தென் அமெரிக்க பழங்குடியினரின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது. மாயன்கள் கட்டிடக்கலை, மொழித்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாயா நாகரீகத்தவர்கள் நாட்காட்டியை கண்டுபிடிக்கவில்லை. அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த மற்ற நாகரீகத்தவர்கள் உபயோக படுத்தியது போலவே இவர்களும் கிமு 2000 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை நாட்காட்டியை பயன்படுத்தினர். மாயன்களின் நாட்காட்டியில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைபிடிக்கப்பட்டது. இது மூன்று காலங்களின் சுழற்சி முறைப்படி கணக்கிடப்படுவதாகவும், கடைசி சுழற்சியின் இறுதி நாளாக 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாளில் உலகம் அழிவதற்கு எரிமலை வெடிப்பு, சூரிய புயல், தீவிரவாத தாக்குதல், கோள்கள் பூமியின் மீது மோதுதல் ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என பட்டியலிடப்பட்டுள்ளது.
இது எதுவுமே அறிவியல் கண்ணோட்டத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும், நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளன்று உலகம் அழியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும்தான் அப்பட்டமான உண்மை.
மாயன்கள் இதே போன்ற பல வகையான நாட்காட்டிகளை பயன்படுத்தி உள்ளனர். மாயன்கள் அவர்களின் தேவைகேற்ப உபயோகித்த ஒரு வகையான நாட்காட்டியை வைத்து உலகம் அழியும் என்று கருதுவது எப்படி பரவியது என்று தெரியவில்லை.
இப்போது நாம் பயன்படுத்தும் நாட்காட்டிகள் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் (பூமி ஒரு முறை சூரியனை சுற்றும் காலம் ) என்ற கணக்கில் அமைந்துள்ளது,ஆனால் மாயன்களின் நாட்காட்டிகள் 360 நாட்களை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் மனிதன் விவசாயம் செய்ய துவங்கிய பின்னர்தான் நாட்கள்,மாதங்கள்,வருடங்கள் ,காலங்களின் சுழற்சி ஆகியவற்றின் விழிப்புணர்வு ஏற்பட்டது.
இயற்கை சீற்றங்களால் உலகம் அழியும் என்றால், சுனாமி, எரிமலை வெடித்தல், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் இன்று நேற்றல்ல, பூமி தோன்றிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.
இவை அனைத்திற்கும் மேல் பூமிக்கு அழிவு ஏற்பட இன்னும் 7000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
எனவே உலகம் அழியுமா என்ற குழப்பமே வேண்டாம், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் உலகம் அழிய வாய்ப்புகளே இல்லை என்று விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.