தீவிரவாதம் தான் படத்தின் கரு என்றாலும், வன்முறை காட்சிகள் இன்றி, தீவிரவாதத்திற்கான எதிரான கருத்தையும், தீவிரவாதம் ஒரு குறித்து இஸ்லாமியர்கள் மீது உள்ள தவறான கருத்தையும் ரொம்பவே தெளிவாக கரும்புலி படம் சொல்கிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும், அதே சமயம் தீவிரவாதியாக இருப்பவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது
என்பதையும் சொல்லும் இப்படம், தணிக்கை சான்றிதழ் வாங்க பெரும் கஷ்ட்டப்பட்டு, மேல்முறையீடு மூலம் தற்போது தணிக்கை செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
துருக்கியில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் தீவிரவாதிகள் சிலர் தமிழகத்தில் நாசவேலைகளை செய்ய சதிதிட்டம் தீட்டுகிறார்கள். இதற்காக கடல்வழியாக தமிழகத்திற்கு வரும் அவர்கள், சென்னையை அருகே உள்ள கடலோர பங்களா வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள். அந்த வீட்டின் உரிமையாளரான நாயகி வர்ஷா, தனது இரண்டு தோழிகளுடன் கல்லூரி புரோஜக்ட் செய்ய அந்த கடலோர வீட்டுக்கு வருகிறார். அப்போது தீவிரவாதிகள் அந்த மூன்று பெண்களை சிறைபிடிக்க, அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கிறது.
இதில் இஸ்லாமிய பெண்ணான நாயகி வர்ஷா, தீவிரவாதிகளின் நியாயத்தைக் கேட்டு அவர்களுக்கு துணைப் போக முடிவு செய்கிறார். வர்ஷாவை தங்களது இயக்கத்தில் சேத்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்கும் தீவிரவாத இயக்கும், அதற்காக வர்ஷாவின் தோழி ஒருவரை சுட்டு கொல்ல வேண்டும் என்று வர்ஷாவிம் சொல்ல, தீவிரவாதிகளின் பரிசோதனையில் வெற்றி பெறுவதற்காக தனது தோழியையே வர்ஷா சுட்டுக்கொள்கிறார். பிறகு வர்ஷாவையே மனித வெடிகுண்டாக்கி தமிழகத்தை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளின் முடிவுக்கு துணைப்போகும் வர்ஷா, தமிழகத்தை அழித்தாரா அல்லது தீவிரவாதிகள் அழிந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
தீவிரவாதி கூட்டத்தின் தலைவான நடித்திருக்கும் மகேஷ்ராஜாவை தவிர படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள்தான்.
படத்தில் பாடல்கள் இல்லை. டைட்டில் போடும்போது மட்டும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. மோகன்ராஜ் எழுதிய இப்பாடல் நம் நாட்டுப்பற்றை தூண்டுகிறது.
இப்படத்தின் இயக்குநர் பரமேஷ், இதற்கு முன்பு அர்ஜூனை வைத்து சூர்யா பார்வை, சத்யராஜை வைத்து லூட்டு, வணக்கம் தலைவா உள்ளிட்ட ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் தீவிரவாதிகள் என்றால் யார் என்பதையும், இஸ்லாமியர்கள் மீது இருக்கும் தவறான பார்வையையும் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.