லொள்ளுத்தனமான வில்லனான மன்சூர் அலிகான், இப்படத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் லொள்ளு பண்ணுகிறார். பிஸினஸ் செய்வதற்காக வட்டிக்கு பணம் கொடுக்கும் தாதாவான மன்சூர் அலிகான், அந்த வட்டியை வசூலிக்க என்ன வேண்டுமானாலும் செய்கிறார். அப்படி இவரிடம் இருந்து தொழில் செய்வதாக கடன் வாங்கிக்கொண்டு அந்த பணத்தில் திருமணம் செய்துகொள்ளும் பிரவீன் மனைவியை மன்சூர் அலிகான் கடத்திக் கொண்டு
வந்துவிடுகிறார். பிரவீன் மனைவி அஞ்சனா மன்சூர் அலிகானுக்கு கொடுக்கும் தொல்லையால் அவரை மன்சூர் விடுவித்து விட்டாலும், பிரவீன் மன்சூர் அலிகானை பழிவாங்க வேண்டும் என்று, மன்சூர் காதலிக்கும் ஷில்பா போல் போனில் பேசி அவரை அலைய விடுகிறார்.
இந்த நிலையில், தன்னிடம் கடன் வாங்கியவர்கள் உண்பதற்கு உணவு கூட இல்லாமல் இருப்பதைப் பார்த்து கஷ்ட்டப்படும் மன்சூர் அலிகான், தன்னுடைய வட்டி தொழிலையே விட்டுவிட்டு இறுதியில் நல்லவனாக மாறுகிறார். இதற்கிடையில் மன்சூர் அலிகானின் ஒரு தலை காதல் வெற்றி பெற்றதா, அவருடைய காதலை வைத்து அவரை பழி வாங்கும் பிரவீனை மன்சூர் என்ன செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
வட்டி பணத்தை கராராக வசூலிக்கும் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தாலும், அவர் வட்டி வசூலிக்கும் சம்பவங்கள் அத்தனையும் காமெடி காட்சிகள் தான். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள், ஒருவருக்கு ஒரு காட்சி என்றாலே, முப்பது காட்சிகள் வந்துவிடும். இதை வைத்தே ஒரு முழுப் படத்தையும் முடித்துவிடலாம். மன்சூரும் அப்படித்தான் செய்திருக்கிறார்.
புதுமுகம் பிரவீன், சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பார் போலிருக்கிறது. அல்லது மேடைகளில் சிம்பு போல மேக்கப் போட்டு நடனம் ஆடுபவராக இருக்க கூடும். நடனம், நடிப்பு என்று சிம்புவின் ஜெராக்ஸ் காப்பியாக காட்சியளிக்கிறார். ஹீரோயின்கள் சொல்லும்படியாக இல்லை என்றாலும், ஷில்பா ஒரு பாடலில் கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார்.
இந்தி படம் ஒன்றின் ரீமேக் தான் இந்த லொள்ளு தாதா பராக் பராக் என்று சொன்னார்கள். இந்தியில் இப்படிப்பட்ட படத்தைகூடவா எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
இந்தி கதைக்கு, திரைக்கதை, வசனம எழுதியதோடு இப்படத்திற்கு இசை, பாடல்கள் பொறுப்பையும் மன்சூர் அலிகானே ஏற்றுக்கொண்டுள்ளார். ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இப்படம் உருவானாலும், படத்தில் சில இடங்களில் சமுதாயத்தில் நடைபெறும் பிரச்சனைகள் பற்றியும் பேசும் மன்சூர் அலிகானை பாராட்டலாம்.