நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலான கிறிஸ் கெயில் நேற்று புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 7 சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஐபிஎல் 6வது தொடரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. ஆனால் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம்தான் நினைவில் நிற்கக் கூடிய ஒரு ஆட்டமாக கிரிக்கெட் ஆர்வலர்கள் மனதில் நிறைந்திருக்கிறது. அப்படி ஒரு ஆட்டத்தை காட்டினார் ராயல்
சேலஞ்சர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல்.. கிறிஸ் கெய்லுக்கு சிங்கிள் ரன்கள் எல்லாம் வேஸ்ட் போல.. எந்த பந்தை அடித்தாலும் சிக்சர் அல்லது பவுண்டரிதான்.. அப்படி ஒரு விளாசல்... பல சிக்சர்கள் மைதான கூரைக்கு வெளியே பறந்து போய் விழுந்தன...200 ரன்களைத் தொட்டு மேலும் ஒரு சாதனை படைப்பாரோ என்று ஏங்க வைத்தது கெய்லின் ஆட்டம் கிறிஸ் கெய்ல் படைத்த சாதனைகளின் பட்டியல்...
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 30 பந்தில் கெய்ல் சதமடித்தார். 30 பந்துகளில் ஒரு சதமடித்தது என்பது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று.
1) ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை முதல் முறையாக எடுத்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதற்குக் காரணம் கெய்ல்தான். 175 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகாமல் இருந்த கெய்ல்தான் ஐபிஎல் வரலார்றில் அதிக ரன்களைக் குவித்த தனிநபர். இதற்கு முன்னர் மெக்கல்லம் 158 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
2) நேற்றைய போட்டியில் கெய்ல் 17 சிக்சர்களை பறக்கவிட்டதும் ஒரு சாதனையானது. நேற்றைய போட்டியில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூர் அணி மொத்தம் 21 சிக்சர்களை பறக்கவிட்டது மற்றொரு சாதனையாகும்.
3) கெய்ல் தமது அரை சதத்தை 17 பந்துகளிலேயே எட்டியதும் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.
4) இதேபோல் கிறிஸ் கெய்ல் 53 பந்துகளிலேயே 150 ரன்களைக் கடந்ததும் ஒரு சாதனை.
5) கெய்ல் அடித்த சிக்சர்களில் ஒன்று `119 மீட்டர் உயரத்துக்கு பறந்தது. இதுதான் நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் மிக உயரமான சிக்சராகும். நடப்பு தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி 432 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளார் கெய்ல்.
6) கெய்ல் மற்றும் தில்ஷன் ஜோடி மட்டும் 167 ரன்களை குவித்தது.
7) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 62 ரன்களைக் குவித்தது. 7.5 வது ஓவரிலேயே 100 ரன்களைத் தொட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. புனே வாரியர்ஸ் அணியின் முர்டஜா 2 ஓவர்கள் மட்டும் வீசி 45 ரன்களை அள்ளிக் கொடுத்தார். இதேபோல் மார்ஷ் 3 ஓவர் வீசி 56 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.